மாவட்ட செய்திகள்

மதுரையில் சினிமா பாணியில் ருசிகர சம்பவம்: கொள்ளையடித்த கடையிலேயே வைர நகையை விற்ற 4 பேர் சிக்கினர் + "||" + Cinema style in Madurai: Four people were sold to sell a diamond necklace Robbing stores

மதுரையில் சினிமா பாணியில் ருசிகர சம்பவம்: கொள்ளையடித்த கடையிலேயே வைர நகையை விற்ற 4 பேர் சிக்கினர்

மதுரையில் சினிமா பாணியில் ருசிகர சம்பவம்: கொள்ளையடித்த கடையிலேயே வைர நகையை விற்ற 4 பேர் சிக்கினர்
மதுரையில் கொள்ளையடித்த கடையிலேயே வைர நகையை விற்பனை செய்த வியாபாரி உள்பட 4 பேர் சிக்கினர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை,

குருசிஷ்யன் படத்தில் நடிகர்கள் ரஜினி, பிரபு ஆகியோர் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து போலீஸ் அதிகாரி வினுசக்கரவர்த்தி வீட்டிற்கு சென்று அங்குள்ள தங்க, வைர நகைகளை திருடி செல்வார்கள். அந்த நகைகளை மீண்டும் வினுசக்கரவர்த்தியிடமே கொடுப்பார்கள். அவரும் தனக்கு நகைகள் பரிசாக கிடைத்ததாக மனைவியாக நடித்த மனோரமாவிடம் கொண்டு போய் கொடுப்பார். அதை வாங்கி பார்த்த அவர் தன்னுடைய வைர நகை போன்று இருப்பதாக அவர் கூறுவார். அதன் பின்னர் தான் ரஜினியும், பிரபும் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்த அவர்கள் வீட்டில் நகையை திருடியது தெரியவந்தது. அதே போன்று ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், வைர வியாபாரி. மேலும் இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடையும் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 26–ந்தேதி சங்கர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். இந்த நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக சங்கருக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

உடனே சங்கர், எஸ்.எஸ்.காலனியில் வசிக்கும் தனது உறவினர் வெங்கடேஷ் என்பவரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார். அவர் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டும், ஜன்னல்கள் திறந்த நிலையிலும் இருப்பதை பார்த்தார். பின்னர் அவர் இதுகுறித்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவின் உள்ளே இருந்த லாக்கரை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர கொள்ளை சம்பவத்தை மோப்பநாய் மூலம் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி இருப்பதும் தெரியவந்தது. எனவே தல்லாகுளம் போலீசார், இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே இலங்கை சென்றிருந்த சங்கர் ஏப்ரல் 1–ந்தேதி மதுரை வந்தார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது 170 பவுன் தங்க நகை, வைர நகைகள், பணம் கொள்ளை போனதாக தெரிவித்தார். இதுகுறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மாயாண்டி, அமல்நாதன், ராஜேந்திரன், போலீஸ்காரர்கள் போஸ், சலத்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கர் நகைக்கடைக்கு மதுரை கருப்பாயூரணி சீமான் நகரை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளியான மாடசாமி(வயது 49) என்பவர் தன்னிடம் உள்ள ரைவ நகையை விற்பனை செய்வதற்காக வந்தார். அந்த நகையை பெற்று கொண்ட அவர் வைரம் குறித்து சோதனை செய்தார். அப்போது அந்த நகை தனது வீட்டில் திருடப்பட்ட வைர நகை என்பது சங்கருக்கு தெரியவந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் போலீசார் கொடுத்த யோசனை படி மாடசாமியிடம் சங்கர் நகைக்கு பணமாக ரூ.2 லட்சத்தை கொடுத்தார். அவரும் பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவருக்கு தெரியாமல் போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மாடசாமி பணத்தை தனது கூட்டாளிகளான செல்லூர் கொன்னவாயன் சாலையை சேர்ந்த காளீஸ்வரன்(42), தென்னையோலைக்கார தெருவை சேர்ந்த கார்த்திக் (30), மாடசாமியின் தம்பி ராமர் (36) மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு பணத்தை பிரித்து கொடுத்தார். அதுவரை காத்திருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது பாலமுருகன் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்றார்.

பிடிபட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் காளீஸ்வரனும், பாலமுருகனும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். இதில் காளீஸ்வரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொடுத்த யோசனையின் படி தான் பாலமுருகன் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளார். அதன்படி சங்கர் வீடு வெகுநாட்களாக பூட்டி இருப்பதை அறிந்து அந்த வீட்டில் கொள்ளையடித்து உள்ளனர். மேலும் அந்த நகைகளை நகை செய்யும் தொழிலாளியான மாடசாமி, அவரது தம்பி ராமர் ஆகியோருடன் கொடுத்து அதனை உருக்கி நகை கட்டிகளாக மாற்றினார்கள். பின்னர் அந்த நகைக்கட்டியை வியாபாரி கார்த்திக்கிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளனர்.

அதில் ஒரு வைர நகையை மட்டும் அவர்களால் உருக்கி விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் அதன் மதிப்பு குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை. எனவே தான் நகைக்கடை பஜாரில் உள்ள பெரிய நகை வியாபாரியான சங்கரிடம் கொடுத்து நகையின் மதிப்பை அறிந்து விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காளீஸ்வரன், மாடசாமி, ராமர், கார்த்திக் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 56 பவுன் தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மீதமுள்ள 114 பவுன் நகைகள் குறித்து தலைமறைவாக உள்ள பாலமுருகனை பிடித்தால் தான் தெரியவரும். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் 19–ந் தேதி தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நரிமேடு மருதுபாண்டியர் நகரில் உள்ள அடகுக்கடையை உடைத்து 11¼ கிலோ தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் வெல்டிங் எந்திரம் மூலம் லாக்கர்கள் உடைக்கப்பட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டதில் 5 பேர் சம்பவத்தை நிகழ்த்திவிட்டு சரக்கு வேனில் தப்பி சென்றது தெரியவந்தது.

அதை தொடர்ந்து தான் நகைக்கடை அதிபர் சங்கர் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 2 சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசார் இரவு, பகல் என்று பாராமல் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் சங்கர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அதே போன்று அடகுக்கடை சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.