3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது: தாறுமாறாக ஓடிய கார் டெய்லரின் உயிரை பறித்தது


3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது: தாறுமாறாக ஓடிய கார் டெய்லரின் உயிரை பறித்தது
x
தினத்தந்தி 2 Jun 2019 5:00 AM IST (Updated: 2 Jun 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார், எதிரே அடுத்தடுத்து வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற டெய்லர் பலியானார். பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பண்ணைகுடியை சேர்ந்தவர் சத்தியேந்திரன் (வயது 41). இவர் மதுரையில் இருந்து தேனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உசிலம்பட்டியில் தேனி ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகில் அவர் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதே வேளையில் எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து அந்த கார் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த உசிலம்பட்டி அருகே முத்தப்பாண்டிபட்டியை சேர்ந்த செல்வம்(45), அவருடைய மகள் மாலதி(20), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த பாண்டியம்மாள், ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானியை சேர்ந்த மணிகண்டன், உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கனிபாண்டி(48) ஆகிய 5 பேரும் தூக்கிவீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர்.

பின்னர் காயமடைந்த 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனிபாண்டி பரிதாபமாக இறந்தார். கனிபாண்டி டெய்லராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

படுகாயமடைந்த செல்வம், மாலதி, பாண்டியம்மாள், மணிகண்டன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உசிலம்பட்டியில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் கார் தாறுமாறாக ஓடி, 3 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு டெய்லரையும் பலிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story