நாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வி? போலீஸ் விசாரணை


நாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வி? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 Jun 2019 10:15 PM GMT (Updated: 1 Jun 2019 8:33 PM GMT)

நாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கு காதல் தோல்வி காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் லோகேந்திரன். இவருடைய மகள் தனுஷியா (வயது 19), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி சார்பில் நர்சிங் பயிற்சி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தனுஷியா நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். அவர் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தார். தனுஷியாவின் அறையில் மேலும் 4 மாணவிகளும் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் தனுஷியா தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனே ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

ஆனால் தனுஷியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் சரிவர தெரியவில்லை. இதுதொடர்பாக தனுஷியாவின் விடுதி தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனுஷியா ஒரு வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தனுஷியாவிடம் அவருடைய காதலன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே தனுஷியா காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக அவருடைய காதலன் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தனுஷியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகள் இறந்ததை கேட்டு பதறிப்போன பெற்றோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த தனுஷியாவை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story