வெட்டன்விடுதி சந்தையில் வெள்ளாடுகள் விலை கிடுகிடு உயர்வு ரம்ஜான் பண்டிகையையொட்டி போட்டிபோட்டு வாங்கினர்


வெட்டன்விடுதி சந்தையில் வெள்ளாடுகள் விலை கிடுகிடு உயர்வு ரம்ஜான் பண்டிகையையொட்டி போட்டிபோட்டு வாங்கினர்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 8:39 PM GMT)

ரம்ஜான் பண்டிகையை யொட்டி வெட்டன் விடுதி சந்தையில் வெள்ளாடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெட்டன்விடுதி கிராமம் உள்ளது. இங்கு சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் ஆடு, கோழி சந்தை பிரபலம் என்பதால் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து ஏராளமானோர் ஆடு, கோழிகளை வாங்க, விற்க வந்து செல்வார்கள். லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும் சந்தையாக வெட்டன் விடுதி சந்தை திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமியர்கள் புனித பண்டிகையான ரம்ஜான் திருநாள் வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்து இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் மட்டன் பிரியாணி உள்ளிட்ட பதார்த்தங்களை செய்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்வர். இஸ்லாமியர்கள் வீடுகளில் செய்யப்படும் பிரியாணி மற்றும் தாழி குழம்பிற்கு தனிமவுசு உண்டு.

விலை கிடுகிடுவென உயர்வு

இதனால் ரம்ஜான் பண்டிகை நெருங்கினாலே ஆடு, கோழிகளுக்கு கிராக்கி ஏற்படுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்கள் உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற வெட்டன் விடுதி சந்தையில், ஆடு, கோழிகளை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

சென்றவார சந்தையில், 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்கப்பட்ட நிலையில், நேற்றைய சந்தையில், ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை விற்பனை ஆனது. இதனால் ஆடுகளை விற்க வந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்த போதும், வாங்க வந்தவர்கள் பெரும் சிரமமடைந்தனர். சிலர் வாங்காமலேயே திரும்பி செல்லும் நிலையும் உருவானது.

பொதுமக்கள் பாதிப்பு

இதுகுறித்து கறம்பக்குடியில் ஆட்டிறைச்சி வியாபாரம் செய்யும் இஸ்லாமியர் ஒருவர் கூறியதாவது:-

கடைகளில் ஆட்டிறைச்சியை கிலோ ரூ.550 முதல் ரூ.600 வரை விற்பனை செய்கிறோம். ஆனால் சந்தையில், கிலோ ரூ.800 என்ற அளவில் விற்றால் அதை வாங்கி எப்படி வியாபாரம் செய்ய முடியும். தேவை அதிகரித்து உள்ளதை தெரிந்து கொண்டு இடைதரகர்கள் சந்தையில், புகுந்து தாறுமாறாக விலை ஏற்றத்தை உருவாக்கி விடுகின்றனர். இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாதிக் கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினர். இதேபோல் நேற்றைய சந்தையில், நாட்டுக் கோழிகளின் விலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.400 வரை விற்கப்பட்ட நாட்டுக்கோழி நேற்று ரூ.550 வரை விற்பனை ஆனது. சந்தையில் விற்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையே இடைதரகர்கள் புகுந்து கொள்ளை லாபம் பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கறம்பக்குடி பகுதியில் கடந்த 3 மாதமாக கோவில் திருவிழாக்களில் நடைபெற்ற கிடா வெட்டு பூஜைகளில், ஆயிரக்கணக்கான ஆடுகள், பலியிடப்பட்டதால் வரத்து குறைந்த தும், விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 

Next Story