ஊட்டி-கூடலூர் சாலையின் இருபுறங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்


ஊட்டி-கூடலூர் சாலையின் இருபுறங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:15 AM IST (Updated: 2 Jun 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-கூடலூர் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

ஊட்டி,

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் நிலவும் சீதோ‌‌ஷ்ண காலநிலையை அனுபவிக்கவும், கோடை விடுமுறையை களிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு கூடலூர் சாலையில் பயணிக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இவை அடுத்தடுத்து உள்ளதால், ஆங்காங்கே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி இறங்கி சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பார்வையிட்டு வருகின்றனர். பைன்பாரஸ்ட் சுற்றுலா தலம் முன்பு வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சூட்டிங்மட்டம் மற்றும் பைக்காரா பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட வில்லை.

அந்த சாலை வளைந்து, நெளிந்து செல்லும் குறுகிய சாலையாக உள்ளது. இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், ஊட்டி அருகே உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களை காண செல்கிறார்கள். இரண்டு புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், இருவழி பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு வனத்துறை மூலம் 2 பேட்டரி வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு சுற்றுலா வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. அதன் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்படுவதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் அப்பகுதியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். ஆகவே, சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் முறைப்படுத்த வேண்டும். வருங்காலங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று ஊட்டி வென்லாக் சாலையில் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பி வழிந்ததால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Next Story