மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு இந்தி திணிப்பை உடனடியாக கைவிடவேண்டும் என நாமக்கல்லில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

நாமக்கல், 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இந்தி கட்டாயம் என்பதைதான் எல்லாரும் எதிர்க்கிறார்கள். பலநேரங்களில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்தி திணிப்பு முயற்சியை மேற்கொண்டாலும், எப்போதும் அது வெற்றிபெற்றது இல்லை. சிறு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தும்.

இந்தியை தொழிலுக்கு தேவையானவர்கள் தாங்களாக கற்றுக்கொள்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் கற்று கொள்வதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. கற்றுத்தான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மத்திய அரசு இந்தி திணிப்பு முயற்சியை உடனடியாக கைவிடவேண்டும்.

தேர்தல் நேரத்தில் சொன்னதுபோல பல்வேறு திட்டங்களை எப்படி நடைமுறைபடுத்துவது என்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளோம். இன்னும் 2, 3 மாதங்களில் இந்த தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்க்கமுடியும்.

நமது எம்.பி. முதல்நாள் முதலே குடிநீர் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுத்து வருகிறார். திருமணிமுத்தாறு திட்டத்தை கொண்டுவந்தே தீரவேண்டும் என்ற முடிவோடு இருக்கிறோம். கண்டிப்பாக திருமணிமுத்தாறு திட்டம் நமது மாவட்டத்திற்கு வரும். அதுதான் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் திட்டமாக இருக்கும்.

கடந்த முறை தமிழகத்தில் இருந்து 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் சென்றனர். ஆனால் அவர்கள் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி இன்றி எதையும் பேசமுடியாது. ஆனால் தற்போதைய எம்.பி.க்கள் அப்படி இல்லை. தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறுவதற்கான முழு உரிமையையும் நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே கடந்த முறை வெற்றிபெற்ற எம்.பி.க்களுடன், இந்த முறை வெற்றிபெற்ற எம்.பி.க்களை ஒப்பிடமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., கொ.ம.தே.க. தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.எஸ்.ஆர்.துரை, மணி, செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story