சபாநாயகர் தேர்வு ஜனநாயக விரோதமாக நடக்கிறது - அன்பழகன் எம்.எல்.ஏ.


சபாநாயகர் தேர்வு ஜனநாயக விரோதமாக நடக்கிறது - அன்பழகன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 2 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சபாநாயகர் தேர்வு ஜனநாயகத்துக்கு விரோதமாக நடக்கிறது என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.எ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

புதுவையில் தி.மு.க. துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு புதிய சபாநாயகரை தேர்வு செய்ய 3–ந்தேதி (நாளை) தேர்தலை அறிவித்து ஜனநாயக படுகொலையை செய்துள்ளது. சபாநாயகர் தேர்தல் என்பது சட்டசபை நடக்கும்போது 14 நாட்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்கு முன் அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

அனைவரும் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்பம் செலுத்தவும் காலக்கெடு கொடுக்கவேண்டும். ஆனால் இப்போது நாளை (இன்று) பிற்பகலுக்குள் வேட்புமனு தர கூறியுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகளை பணிக்கு அழைத்த கவர்னரை கண்டித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி இப்போது தோல்வி பயத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் சபாநாயகர் பதவிக்கான போட்டிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகி 800 கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ளது. அந்த தொகுதி எம்.எல்.ஏ. சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்பினால் அவர் எப்படி வந்து மனுதாக்கல் செய்ய முடியும்? ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஜனநாயகத்தை பற்றி முதல்–அமைச்சர் சிந்திக்கவில்லை. இது ஜனநாயகத்துக்கு கரும்புள்ளி.

இந்த பிரச்சினையை எங்கள் தலைமையின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். தேர்தலில் எங்களின் நிலைப்பாடு குறித்து கட்சி தலைமையின் ஆலோசனையை பெற்று செயல்படுவோம். சட்டரீதியாக இந்த பிரச்சினையை எடுத்து செல்லலாமா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story