25 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிகளவு மாணவர்கள் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


25 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிகளவு மாணவர்கள் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் தேர்வு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:15 AM IST (Updated: 2 Jun 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

25 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிகளவு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் தேவையான மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி முதல் மே மாதம் 18-ந் தேதி வரை 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நுழைவுநிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அந்தந்த பள்ளிக்கான நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் எண்ணிக்கையை விட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பள்ளியில் சேர முதன்மைக்கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட சேர்க்கைக்கான ஆணையினை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதல்வர்களிடம் பெற்றோர் பெற்றுக் கொள்ளலாம்.

அந்தந்த பள்ளிக்கான நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டினை விட அதிகமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால், தகுதியான விண்ணப்பங்களுக்கு வருகிற 6-ந் தேதி அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் அரசு பிரதிநிதிகள், அரசு ஆய்வு அலுவலர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்படும். மேலும் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பதாரர்கள் குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன்னதாகவே தேவையான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story