ஹாசன் அருகே, மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்தது: குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி சாவு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
ஹாசன் அருகே, மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
ஹாசன்,
ஹாசன் அருகே, மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
உருளை கிழங்கு ஏற்றிக்கொண்டு...
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேகவுடா(வயது 55) விவசாயி. இவரது மனைவி சாரதம்மா(50). இந்த தம்பதியின் பேரக்குழந்தைகள் ருச்சிதா(8), துச்சிதா(5).
இந்த நிலையில் நேற்று காலை ராஜேகவுடா தனது மனைவி சாரதம்மா, பேரக்குழந்தைகள் ருச்சிதா, துச்சிதா ஆகியோருடன் மாட்டு வண்டியில் உருளைக்கிழங்குகளை ஏற்றிக் கொண்டு தோட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் தோட்டத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் ஒரு குழியில் மாட்டு வண்டி இறங்கிய போது திடீரென நிலைதடுமாறியது. மேலும் அருகே இருந்த ஏரிக்குள் மாட்டு வண்டி பாய்ந்தது. இதனால் மாட்டு வண்டியில் சென்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
4 பேர் சாவு
சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஹள்ளி மைசூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள் உதவியுடன் 4 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதன்பின்னர் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து ஹள்ளிமைசூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்ததில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஹாசனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story