கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 2 Jun 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் கோடை விழா கடந்த 30–ந்தேதி கோடை விழா தொடங்கியது. வருகிற 8–ந்தேதி நிறைவு பெறுகிறது. தற்போது கொடைக்கானலில் இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவுகிறது. கோடை விழாவையொட்டி தினமும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் களைகட்டின. மேலும் சுற்றுலா பயணிகள் பல்வேறு கேளிக்கைகளிலும் உற்சாகமாக ஈடுபட்டனர். நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாய் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தனர். இதுமட்டுமின்றி குதிரை சவாரி, சைக்கிள் சவாரி ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது மேகக்கூட்டங்கள் தரையிறங்கி சென்றது. மேலும் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள மலர்களையும் சுற்றுலா பணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story