திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் தாலுகாவில் ஜமாபந்தி இன்று தொடங்குகிறது


திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் தாலுகாவில் ஜமாபந்தி இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 Jun 2019 3:45 AM IST (Updated: 3 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி இன்று தொடங்குகிறது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்கி, வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளர் மோகன், ஜமாபந்தி அதிகாரியாக கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அதற்கு தீர்வு வழங்குவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதில் சித்தலிங்கமடம் குறுவட்டத்திற்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை), திருப்பாலப்பந்தல் குறுவட்டத்திற்கு நாளை மறுநாளும்(புதன்கிழமை), 7-ந் தேதியும், திருக்கோவிலூர் குறுவட்டத்திற்கு 10, 11-ந் தேதிகளிலும், திருவெண்ணெய்நல்லூர் குறுவட்டத்துக்கு 12, 13-ந் தேதிகளிலும், மணலூர்பேட்டை குறுவட்டத்துக்கு 14, 17-ந் தேதிகளிலும் ஜமாபந்தி நடக்கிறது.

இதேபோல் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் ஜமாபந்தி அதிகாரியாக திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாருஸ்ரீ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். இதில் அரகண்டநல்லூர் குறுவட்டத்துக்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 7-ந் தேதியும், முகையூர் குறுவட்டத்துக்கு 7, 10-ந் தேதிகளிலும் ஜமாபந்தி நடக்கிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல்களை தாசில்தார்கள் திருக்கோவிலூர் சிவசங்கரன், கண்டாச்சிபுரம் சீனுவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Next Story