உளுந்தூர்பேட்டை- சங்கராபுரம் பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை
உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் செத்தன.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரமாக விட்டு விட்டு பெய்த இந்த மழையினால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவர் அவருக்கு சொந்தமான 2 பசுமாடுகளை வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்து பகுதியில் கட்டி வைத்திருந்தார். அந்த பகுதியிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 பசுமாடுகளும் உடல் கருகி செத்தன.
இதேபோல் சங்கராபுரம் அருகே சவேரியார்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அப்பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்தன. கள்ளக்குறிச்சி சாலையில் மின் கம்பத்தின் மீது மரம் சாய்ந்ததில் மின் கம்பம் முறிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று காலை மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பத்தை சரிசெய்து மின்சாரம் வழங்கினர்.
இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியில் நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story