ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது குழந்தை சாவு நர்சு மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் முற்றுகை


ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது குழந்தை சாவு நர்சு மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Jun 2019 10:15 PM GMT (Updated: 2 Jun 2019 7:32 PM GMT)

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவத்தின்போது குழந்தை இறந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நர்சு மீது நடவடிக்கை கோரி சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணி நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 27). இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு மருந்து கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அயிணா(25). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் ஆகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அயிணாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பெருகமணி காவிரி கரையோரம் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பச்சைநாச்சி மற்றும் ஆயா வேலை செய்யும் சந்திரா ஆகியோர் பணியில் இருந்தனர். அவர்கள் அயிணாவை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் அயிணாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது.

நர்சு மற்றும் ஆயா ஆகியோர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் தலைப்பகுதி வெளியில் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையின் உடல் பகுதி வெளியே வரமுடியாமல் அயிணா நீண்ட நேரம் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நர்சு பச்சைநாச்சி, டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று காலை அங்கு வந்த டாக்டர், மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அயிணாவிற்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்திற்கு பின்னர் அயிணாவிற்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

இது குறித்து அயிணாவின் கணவரிடம் தெரிவித்தபோது, அவரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பிரசவம் பார்த்த நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டு, விளக்கம் கேட்டனர். ஆனால் பணியில் இருந்த டாக்டர், அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் அயிணாவின் உறவினர்களும், பொதுமக்களும் ஆத்திரமடைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து பழனிசாமி கூறுகையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு தேவையான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அப்படி இருந்தும் பிரசவம் பார்க்கின்றனர். மேலும் இங்கு இரவு நேரத்தில் டாக்டர்கள் பணி ஒதுக்கீடு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் நர்சு மட்டுமே பணியில் உள்ளார். குழுமணி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது திருச்சி அரசு மருத்துவமனைக்கோ அயிணாவை, இரவு பணியில் இருந்த நர்சு அனுப்பியிருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. குழந்தையின் இறப்பிற்கு இரவு பணியில் இருந்தவர்களே காரணம் என்று கண்ணீர் மல்க கூறினார். இனி வரும் காலங்களில் இது போன்று நர்சு செயல்படாமல் இருக்க வேண்டும் என்றும், குழந்தை இறப்பிற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கூறினர்.

இது பற்றி அந்தநல்லூர் வட்டார மருத்துவ அதிகாரி லியோ பீமராவிடம் கேட்டபோது, பணியில் இருந்த நர்சிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

இதற்கிடையே நேற்று அதிகாலை சிறுகமணி பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சாகுல் என்பவர் தன்னுடைய மகளை பிரசவத்திற்காக பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார். ஆனால் நடந்த சம்பவத்தை பார்த்து தன்னுடைய மகளை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story