சபாநாயகர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு - அன்பழகன் எம்.எல்.ஏ. தகவல்
புதுவை சபாநாயகர் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சபாநாயகர் தேர்தலுக்கு உரிய காலஅவகாசம் அளிக்கப்படவில்லை என்றும், சபாநாயகர் தேர்தலை தள்ளிவைக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி, சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் ஆகியோருக்கு கடிதமும் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் நடைபெறும் சபாநாயகர் தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது. அதற்கு போதிய காலஅவகாசம் அளிக்கப்படவில்லை. சட்டமன்ற நடத்தை விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் என்பது சட்டவிரோத செயல்.
இதுதொடர்பாக கவர்னர், சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. முதல்–அமைச்சரின் ஜனநாயக படுகொலைக்கு கவர்னரும் துணைபோகிறாரோ? என்ற சந்தேகம் எழுகிறது.
இதுதொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூடி பேசினோம். அப்போது தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். அரசின் அத்துமீறல்களை சட்டரீதியாக சந்திப்போம்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.