கோபி அருகே மதிப்பு கூட்டுப்பொருட்கள் விற்பனை தொடக்கம்


கோபி அருகே மதிப்பு கூட்டுப்பொருட்கள் விற்பனை தொடக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:30 PM GMT (Updated: 2 Jun 2019 7:40 PM GMT)

கோபி அருகே மதிப்பு கூட்டுப்பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டது.

கோபி,

தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக கூட்டுப்பண்ணைய திட்டம் என்ற முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி பல்வேறு வட்டாரங்களில் 20 விவசாயிகள் அடங்கிய உழவர் ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் கம்பெனிகள் ெதாடங்கப்பட்டுள்ளன.

700 முதல் 1000 விவசாயிகள் கொண்ட இந்த நிறுவனங்கள், கம்பெனி சட்டப்படி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

மேலும் பருப்பு, மாவு எண்ெணய் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரித்து சந்தைப்படுத்துகின்றன. வேளாண்மை துறையின் பல்வேறு திட்டங்களில் மானியங்கள் மற்றும் இயந்திரங்கள் முன்னுரிமை அடிப்படையில் உற்பத்தி குழுக்களுக்கும் உழவர் கம்பெனிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

அதன்படி கோபி, டி.என்.பாளையம், நம்பியூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 900 விவசாயிகள் அடங்கிய ஏர்முனை கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் கம்பெனி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச்சர்க்கரை மற்றும் மரச்செக்கு எண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை தொடக்க விழா கோபி அருகே அளுக்குளி குளிர்பதன கிடங்கில் நடந்தது.

ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வ.குணசேகரன் தலைமை தாங்கி, ஏர்முனை அலுவலகத்தை திறந்துவைத்து நாட்டு சர்க்கரை விற்பனையை தொடங்கி வைத்தும் பேசினார்.

தொடர்ந்து உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பிரேமலதா மதிப்பு கூட்டு இயந்திர அறையை திறந்து வைத்தார். வேளாண் பொறியியல் உதவி பொறியாளர் சுப்பிரமணி வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.

விழாவில் கோபி வேளாண்மை உதவி இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரோஜா (பொறுப்பு), வேளாண்மை அலுவலர் அபிநயா உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏர்முனை நிறுவனத்தின் தலைவர் நல்லசாமி வரவேற்று பேசினார். முடிவில் ஏர்முனை நிர்வாக இயக்குனர் எல்.ஆர்.பழனிச்சாமி நன்றி கூறினார்.

Next Story