நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால் தண்ணீர் வசதியின்றி கருகிய வாழைகள்
நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், போதிய அளவு தண்ணீர் வசதியின்றி வாழைகள் கருகி விட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை வட்டாரத்தில் குறிச்சி, மேலநெட்டூர், ஆலம்பச்சேரி, மத்தனேந்தல், அன்னியேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை பெருமளவு பயிரிடப்படுகிறது. நாட்டு வாழை, ஒட்டு வாழை, முப்பட்டை, பச்சை, ரஸ்தாளி என பல ரகங்கள் இருந்தாலும் மானாமதுரை வட்டாரத்தில் நாட்டு வாழை, முப்பட்டை ரகமே அதிக அளவு பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு 1,000 முதல் 1,400 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யப்படுகிறது.
நடவு செய்யப்பட்ட 10–வது மாதத்தில் இருந்து வாழை காய்பிடிக்க ஆரம்பிக்கும், 12–வது மாதத்தில் காய்கள் அறுவடை செய்யப்படும், காய்கள் அறுவடை செய்யப்பட்ட பின்பு வாரத்திற்கு ஒரு முறை வாழை இலைகள் வெட்டப்படும். ஏக்கருக்கு 200 இலைகள் கொண்ட கட்டு 20 முதல் 50 வரை கிடைக்கும். பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டு விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். மானாமதுரை வட்டாரத்தில் கிணற்று பாசன விவசாயிகள் மட்டுமே வாழை பயிரிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்தாலும், மானாமதுரை வட்டாரத்தில் எதிர்பார்த்த மழை இல்லை. கோடை மழையை நம்பி விவசாயிகள் வாழையை பயிரிட்டனர். வாழைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் இருந்துகொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் போதிய விளைச்சல் இருக்கும். ஆனால் தற்போது மழை பெய்யாமல் ஏமாற்றம் தந்ததாலும், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே இறங்கி விட்டதாலும் வாழைக்கு போதிய தண்ணீர் விடப்படவில்லை.
இதனால் தண்ணீர் வசதியின்றி பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் கருகி விட்டன. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தற்போது செலவு செய்துள்ள விவசாயிகள் கருகிய வாழை மரங்களை கண்டு வேதனையடைந்து வருகின்றனர். வாழைகள் கருகி வருவது குறித்து வேளான்துறையிடம் முறையிட்டும், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகள் ஏமாற்றமும, கவலையும் அடைந்துள்ளனர். கருகிய வாழைகளை கணக்கெடுத்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே தொடர்ந்து வாழை பயிரிட முடியும், இல்லையெனில் வாழை விவசாயத்தை மறந்து விட வேண்டிய நிலை வந்துவிடும் என வேதனையுடன் விவசாயிகள் கூறி வருகின்றனர்.