உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

குளமங்கலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிராமம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கியது.

கீரமங்கலம்,

கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி வீசிய கஜா புயலில் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக் கணக்கான மரங்கள் உடைந்து நாசமானது. அதன் விளைவாக இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல வருடங்களாக வளர்த்து புயலில் இழந்த மரங்களை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் கீரமங்கலம், கொத்தமங்கமல், வடகாடு, அணவயல், மாங்காடு, குளமங்கலம் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சீரமைக்கும் குளங்கள், வரத்து வாரிகள், ஏரிகள், காட்டாறு கரைகளில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டமும் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

இந்த நிலையில் தான் உலக சுற்றுச்சூழல் தினம் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளனர். நீடாமங்கலம் கிரீன் நீடா அமைப்பு வடுவூர் ஏரியில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குளமங்கலம் உறவு இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக கிராமம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் வளாகத்தில் 200 மரக்கன்றுகளை வைத்து தொடங்கினர். மேலும் ஒவ்வொரு மரகன்றுக்கும் தண்ணீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மணிவர்ண மழைமாரியம்மன் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள குளத்தை சீரமைத்து குளத்தின் கரைகளிலும் மரக்கன்றுகள் நடப்படுவதுடன் கிராமத்தின் சாலைகள், வீடுகள், பொது இடங் களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், கஜா புயல் எங்களை புரட்டிப் போட்டது. இதனால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இழந்த மரங்களை மீட்கும் முயற்சியாக மரக்கன்றுகளை நட இளைஞர்கள் திட்டமிட்டு கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் பணியை தொடங்கி உள்ளோம். பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் மரங்கள் குறைவாக உள்ளது. இதனால் தான் முதல்கட்டமாக கோவில் வளாகத்தில் 200 மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பு கூண்டுகள் அமைத்து தண்ணீர் குழாய்கள் வைத்து பணியை தொடங்கி உள்ளோம் என்றனர். 

Next Story