அன்னவாசல் அருகே அரசு பள்ளியை சொந்த செலவில் அழகுபடுத்திய பொதுமக்கள்


அன்னவாசல் அருகே அரசு பள்ளியை சொந்த செலவில் அழகுபடுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே அரசு பள்ளியை பொதுமக்கள் சொந்த செலவில் வர்ணம் பூசி அழகுபடுத்தி வருகின்றனர்.

அன்னவாசல்,

கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படு கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது அரசு பள்ளிகளின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள், சாதனைகள், அரசு வழங்கி வரும் சலுகைகள், ஆங்கில வழிக்கல்வி குறித்து பெற்றோரிடம் எடுத்து கூறி, அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அன்னவாசல் அருகே புதூர் ஊராட்சி, காட்டுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி வர்ணம் பூசி, கரும்பலகைகளை சுத்தப்படுத்தி ஆங்கில வார்த்தைகளை சுவர்களில் எழுதி கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையில், பள்ளியை தயார் செய்து பள்ளியை அழகுபடுத்தி அசத்தி வருகின்றனர். இதே ஊரில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில், பொதுமக்கள் இளைஞர்கள் இணைந்து விளையாட்டு பொருட்களுடன் கூடிய நூலகம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறிகையில், எங்கள் ஊர் இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வாட்ஸ்-அப் குரூப் மூலம் நிதி திரட்டி பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் வரும்போது அன்புடன் வரவேற்று நல்லதொரு கற்றல் சூழலை ஏற்படுத்துவதுவதே எங்களது நோக்கம் என்று கூறினர். 

Next Story