ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 3 Jun 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பூசத்துறை பகுதியில் வெள்ளாறு உள்ளது. இந்நிலையில் இந்த வெள்ளாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1921-22-ம் ஆண்டு அப்போதைய பொதுப்பணித்துறையின் சார்பில் வெள்ளாற்றின் குறுக்கே இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 1922-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. மேலும் இந்த பாலத்தில் பாதசாரிகள் ஓரத்தில் நடந்து செல்லும்போது தவறிவிழுந்து விடக்கூடாது என்பதற்காக பாலத்தின் ஓரத்தில் 2 புறமும் இரும்பு குழாய்களால் கைப்பிடி அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த பாலத்தின் வழியாக தான் மதுரை, திருமயம், காரைக்குடி, ராமேஸ்வரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் இந்த பாலத்தில் ஒரு வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். தற்போது வாகனங்கள் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் அருகே பூசத்துறை பகுதியில் மீண்டும் ஒரு பாலம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையும் இந்த பாலத்தின் வழியாக அமைக்கப்பட்டது.

இரும்பு குழாய்கள் சேதம்

இதனால் தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், லாரிகள் போன்றவை புதிய பாலத்தின் வழியாக செல்வதாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதில்லை. இதனால் தற்போது உள்ள பொதுபணித்துறை அதிகாரிகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் தற்போது இந்த இரும்பு பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக இரும்பு குழாய்களால் அமைக்கப்பட்ட கைப்பிடி ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன.

இரும்பினும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த இரும்பு பாலம் வருகிற 2022-ம் ஆண்டுடன் நூற்றாண்டை நிறைவு செய்ய உள்ள நிலையும் கம்பீரமாக உள்ளது. மேலும் இந்த இரும்பு பாலத்தின் வழியாக அதிக அளவில் வாகனங்கள் செல்வதில்லை என்பதால், அந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகள் மாலையில் இரும்பு பாலத்தின் அமர்ந்து, மது குடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மதுகுடித்து விட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் இந்த பாலத்தின் மீது புதிதாக தார்சாலை மட்டும் அமைக்கப்பட்டது. ஆனால் பாலத்தில் சேதமடைந்து உள்ள இரும்பு குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தில் சேத மடைந்து உள்ள இரும்பு குழாய்களை அகற்றிவிட்டு, பாலத்திற்கு வர்ணம் பூச வேண்டும்.

மேலும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் என்பதால், இந்த இரும்பு பாலத்தை நினைவு சின்னமாக அறிவித்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story