உடுமலை அருகே சந்தனமரம் வெட்டி கடத்திய 4 பேர் கைது
உடுமலை அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
உடுமலை,
உடுமலை ஐஸ்வர்யா நகர், காந்திநகர், போடி பட்டி, எலையமுத்தூர் பிரிவு உள்ளிட்ட சிலபகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்திருந்த சந்தனமரங்கள் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களால் இரவு நேரத்தில் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த சிலநாட்களில் உடுமலை போலீஸ் நிலையத்திற்கு 8 புகார்கள் வந்துள்ளன.
சந்தனமரம் வெட்டி கடத்தல் என்பதால் போலீசார், இதுகுறித்து மேல்நடவடிக்கைக்காக உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து சந்தன மரத்தை வெட்டிகட்டைகளைக் கடத்தும் கும்பலைப்பிடிப்பதற்காக உடுமலை வனச்சரக அலுவலர் சி.தனபாலன் தலைமையில் வனவர் தங்கபிரகாஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட வனத்துறை தனிப்படை அமைக்கப்பட்டது.
உடுமலை நகர பகுதியில் சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் தங்களுக்கு சொந்தமான இடங்களில் தனியார்கள் பொருத்தி வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை வனத்துறை தனிப்படையினர் பார்த்தனர். அப்போது ஐஸ்வர்யா நகரில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு முன்பு பொருத்தி வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த சாலைபகுதியில் ஒரு வெள்ளை நிற கார் அடிக்கடி அந்தபக்கமாக வந்து சென்றுள்ளது தெரிந்தது.
இந்த நிலையில் தனிப்படையினர் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி நகரில் உள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தளி சாலையில் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்த வெள்ளை நிற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 12 துண்டுகள் சந்தன கட்டைகள் இருந்தது. இவை 116 கிலோ எடை இருந்தது. இதையொட்டி காரில் இருந்த டிரைவர் சி.வேங்கன்(வயது 34), விறகு வியாபாரி எம்.பழனிச்சாமி( 32), கு.மாரிமுத்து(19), மாரிமுத்துவின் மாமனார் எம்.ரங்கசாமி( 60) ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களில் ரங்கசாமி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா தங்கம்மபட்டியைச்சேர்ந்தவர். மற்ற 3 பேரும் வேடசந்தூர் தாலுகா வேங்கனூரைச்சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் காரில் கொண்டு வந்த சந்தனக்கட்டைகள் திருமூர்த்தி நகர் அருகில் உள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் இருந்த ஒருமரத்தை வெட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த சந்தனகட்டைகள் மற்றும் சந்தன மரத்தை வெட்ட பயன் படுத்திய கோடாரி, அரிவாள், ரம்பங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் சந்தனக்கட்டைகளைக்கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். உடுமலை நகர பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியது யார் என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story