கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரியில் ஆவின் மூலம் நாள்தோறும் 2.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்


கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரியில் ஆவின் மூலம் நாள்தோறும் 2.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:15 AM IST (Updated: 3 Jun 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஆவின் மூலம் நாள்தோறும் 2.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக, கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த உலக பால் தின விழாவில் தெரிவித்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில்(ஆவின்) பாலின் மகத்துவத்தினை உணர்த்தும் வகையில் உலக பால் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஆவின் ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பி.கே.குப்புசாமி, பால்வளம் துணை பதிவாளர் ராமசந்திரன், ஆவின் மேலாளர் எஸ்.சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆவின் பொது மேலாளர் ஜெயசந்திரன், ஆவின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்த திட்ட விளக்கவுரையாற்றினார். அவர் பேசியதாவது:- மழையின்றி விவசாயிகள் கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. அதன்படி கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 491 சங்கங்கள் மூலம் 27 ஆயிரத்து 480 பால் உற்பத்தியாளர்கள் மூலம் 2 லட்சத்து 35 ஆயிரத்து லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால், உள்ளூர், சென்னை, வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், பால் மூலம் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி 5 அதிநவீன பால் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மேலும் 3 நவீன பாலகங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு நாள்தோறும் 500 மில்லிலிட்டர் பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம், ஆவின் பால் விற்பனையாளர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 5 வயது முதல் 12 வரையிலான குழந்தைகளுக்கு ஆவினின் அதிசயம் என்கிற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதே போல் ஆவின் பணியாளர்களுக்கு ஆவின் உணவே ஆரோக்கியம் என்கிற தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. விழாவில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆவின் அலுவலர்கள், பணியாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story