8 வழிச்சாலை திட்டம் குறித்து மேல்முறையீடு: மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் பேட்டி


8 வழிச்சாலை திட்டம் குறித்து மேல்முறையீடு: மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் கூறினார்.

திருச்செங்கோடு,

கடந்த 1948-ம் ஆண்டு சேலம் சிறையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்து போன 22 பேரில் ஒருவரான தியாகி காவேரியின் மகனும், துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பக்கத்து சிறையில் இருந்தவருமான சேசாசலம் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆவார். இவர் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். முதுமையால் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

இந்த நிலையில் சேசாசலத்தின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது படத்திறப்பு விழா நேற்று சூரியம்பாளையத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சேசாசலத்தின் படத்தை திறந்து வைத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வேலாயுதம் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தி திணிப்பு

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்ற உடனேயே தமிழகத்தின் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்தியை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது இந்தி திணிப்பு ஆகும். இது தேச ஒற்றுமைக்கு ஆபத்தை தான் விளைவிக்கும். இந்த கொள்கை அறிவிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டில் மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் இடம் பெற்று இருப்பதும், அதற்கான சட்டம் திருத்தப்பட்டு உள்ளதும் மோசமான செயலாகும். அதை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.

8 வழிச்சாலை

சென்னை-சேலம் 8 வழிச்சாலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் ஐகோர்ட்டு அதை ரத்து செய்தது. ஆனால் மத்திய அரசு பொறுப்பேற்ற உடனேயே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருப்பது மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. இந்த மேல்முறையீட்டை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story