சங்கரன்கோவிலில் பயங்கரம்: 4 வயது சிறுவன் அடித்துக் கொலை
சங்கரன்கோவிலில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் சபரி. இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகன் குட்டிராஜ் (வயது 4). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரியின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் அவருக்கு உதவியாக மகேஸ்வரி இருந்தார்.
அப்போது கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்த கருப்பையா மகன் கருப்பசாமி என்பவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க வந்தார். அவருக்கும், மகேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கருப்பசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த மகேஸ்வரியின் தாயாரையும் கருப்பசாமி உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இதனால் மகேஸ்வரி, கருப்பசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி, மகேஸ்வரியின் வீட்டுக்கு வந்தார். அப்போது மகேஸ்வரி கடைக்கு சென்று விட்டதால் சிறுவன் குட்டிராஜ் மட்டும் அங்கு இருந்தான். மகேஸ்வரி கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது குட்டிராஜ் வீட்டில் இறந்து கிடந்தான். படியில் தவறி விழுந்து சிறுவன் இறந்ததாக மகேஸ்வரியிடம் கருப்பசாமி தெரிவித்தார். இதையடுத்து சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சிறுவனின் சாவில் மர்மம் இருப்பதாக சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் தங்கப்பதுமை, சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கருப்பசாமிக்கு விபரீத நோய் உள்ளதாகவும், அந்த நோயின் தாக்கம் அதிகமாகும் நேரத்தில் கோபம் அதிகமாகி என்ன செய்கிறோம் என தெரியாமல் நடவடிக்கைகள் மாறும் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்ற கருப்பசாமி, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை விபரீத நோயால் அடித்ததாகவும், எட்டி உதைத்ததாகவும் தெரிகிறது. இதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர் அவனது உடலை யாருக்கும் தெரியாமல் எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தாயின் கள்ளக்காதலனால் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை, சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் பாராட்டினார்.
Related Tags :
Next Story