கட்சியில் தனது பேச்சுக்கு மரியாதை இல்லை என குற்றச்சாட்டு: ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் ராஜினாமா?
கட்சியில் தனது பேச்சுக்கு மரியாதை இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
கட்சியில் தனது பேச்சுக்கு மரியாதை இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதரிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய எச்.விஸ்வநாத், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவருக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் பதவியை வழங்கியது. சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையாவுக்கு எதிராக பகிரங்கமாக விமர்சித்து பேசினார். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்தை ஜனதா தளம் (எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் ஆதரிக்கவில்லை.
கடும் அதிருப்தி
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக எச்.விஸ்வநாத் கூறினார். இதை தேவேகவுடா ஒப்புக்கொள்ளவில்லை. கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் தனக்கு இடம் வேண்டும் என்று எச்.விஸ்வநாத் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் அவரை சித்தராமையா சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எச்.விஸ்வநாத் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த மாதம்(மே) 31-ந் தேதி வெளியானது.
எச்.விஸ்வநாத் ராஜினாமா
இதில் கே.ஆர்.நகரில் ஜனதா தளம்(எஸ்) தோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எச்.விஸ்வநாத், “ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. சிலருக்கு டிக்கெட் வழங்குமாறு பரிந்துரை செய்தேன். டிக்கெட் கிடைக்கவில்லை. எனது பேச்சுக்கு மரியாதையே இல்லை” என்று பகிரங்கமாகவே கூறினார்.
இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) தலைவர் பதவியை எச்.விஸ்வநாத் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு கட்சியில் வழங்கப்பட்ட கார் உள்ளிட்ட வசதிகளை திருப்பி வழங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story