வேலை செய்து கொண்டே ராணுவ சேவை செய்யலாம் : பிராந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்ப்பு


வேலை செய்து கொண்டே ராணுவ சேவை செய்யலாம்  : பிராந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 3:52 PM IST (Updated: 3 Jun 2019 3:52 PM IST)
t-max-icont-min-icon

பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்பவர்கள் வேறு வேலை பார்த்துக் கொண்டே ராணுவ அதிகாரியாக சேவை செய்யலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவம் தரைப்படை, கடற்படை, விமானப்படை எனும் முப்பிரிவுகளாக செயல்படுகிறது. சர்வதேச அளவில் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேரா வண்ணம் இந்த படைப்பிரிவுகள் காத்து கடமையாற்றுகின்றன. உள்நாட்டிற்குள் ஏற்படும் சமூக விரோத செயல்களை அடக்குவதற்காக துணை ராணுவ படைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ராணுவ அமைப்புகளுக்கு உதவிகரமாக செயல்படும் வகையில் ‘டெரிட்டோரியல் ஆர்மி’ எனும் ‘பிராந்திய ராணுவ’ அமைப்பு இயங்குகிறது. காவல்துறைக்கு உதவியாக ஊர்க் காவல் படையினர் செயல்படுவதுபோல, ராணுவத்தின் ஓர் உதவி அமைப்பாக இந்த பிராந்திய ராணுவம் செயல்படுகிறது.

ராணுவப் பணியை விரும்பும் இளைஞர்கள், தாங்கள் செய்யும் வேலைக்கு இடையூறு இல்லாமல், இருக்கும் இடத்திலேயே குறிப்பிட்ட கால பயிற்சி பெற்று பிராந்திய ராணுவத்தில் சேவையாற்றலாம். அரசு பணி, தனியார் பணி, சுயதொழில் என எந்த தொழிலில் இருப்பவர்களும் இதில் சேரலாம்.

ஆனால் காவல்துறை, ஆயுதப்படை, துணை ராணுவ பிரிவுகளில் பணியில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. பணிக்காலத்தில் ராணுவ அதிகாரிகள் பெறும் ஊதியம் மற்றும் சலுகைகளையும் பெறலாம். விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இந்த பிரிவில் கவுரவ ராணுவ சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு பட்டதாரிகளை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருவதற்கான மேலும் சில தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25-6-2019-ந் தேதியில் 18 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் 2 ஆண்டுகளுக்கு அவ்வப்போது ராணுவ பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் அவர்கள் வழக்கமாக செய்யும் பணியில் நீடித்துக் கொண்டே ராணுவ அதிகாரியாக பணியாற்றலாம். லெப்டினன்ட் அதிகாரியாக பணி பெறும் அவர்கள் பணிக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை இணைக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-6-2019

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 28-7-2019

இது பற்றிய மேலும் விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.jointerritorialarmy.gov.in

Next Story