மது குடிக்க அழைத்து சென்று ரவுடியை சரமாரியாக வெட்டிய நண்பர்கள்


மது குடிக்க அழைத்து சென்று ரவுடியை சரமாரியாக வெட்டிய நண்பர்கள்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே மது குடிக்க அழைத்து சென்று ரவுடியை சரமாரியாக வெட்டிய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமம் காலனிப்பகுதியில் உள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ருத்திரகுமார் (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

குற்றவழக்கு ஒன்றில் சிறையில் இருந்துவிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஜாமீனில் ருத்திரகுமார் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ருத்திரகுமாரின் நண்பரான உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்த எழில் என்பவர் நேற்று முன்தினம் மாலை ருத்திரகுமாரை மது குடிக்க அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் அங்குள்ள குளம் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

பின்பு மற்றொரு நண்பரான குண்ணவாக்கத்தை சேர்ந்த அப்பு என்பவர் மது வாங்கி வைத்துக்கொண்டு அழைப்பதாக கூறி ருத்திரகுமாரை உத்திரமேரூர் அடுத்த குண்ணவாக்கம் நாவல்மர தோப்புக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு ருத்திரகுமார் அவரது நண்பர்களான எழில், அப்பு மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 4 பேரும் மது குடித்தனர். அப்போது எழில் மது வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். அவர் சென்றதும் அப்புவும், அந்த அடையாளம் தெரியாத நபரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் ருத்திரகுமாரின் தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்பாராத ருத்திரகுமார் சுதாரித்துக்கொண்டு பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் அவர்கள் துரத்தினர். அப்போது ருத்திரகுமார் சத்தம் போட்டதால், பொதுமக்கள் திரண்டனர். உடனே 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் பொதுமக்கள் ரத்தவெள்ளத்தில் இருந்த ருத்திரகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் ருத்திரகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story