மருத்துவமனை பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு மற்ற மாவட்டங்களை போன்று வேலூர் மாவட்டத்திலும் கூலியை உயர்த்தி வழங்கவேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
கலெக்டர் ராமன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரம் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு கடந்த 5½ ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம்.
புறநோயாளிகள் சீட்டுப்பதிவு, மருந்து கட்டுதல், துப்புரப்பணி, உள்நோயாளிகள் வார்டு பணி மற்றும் அலுவலர்களால் கூறப்படும் இதர அலுவலக பணிகள் உள்பட 15 வகையான பணிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு ரூ.311 மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் ரூ.478, கடலூரில் ரூ.460, ராமநாதபுரத்தில் ரூ.406, திருவண்ணாமலையில் ரூ.450, தூத்துக்குடியில் ரூ.410 தினக்கூலியாக வழங்கப்படுகிறது. எங்களில் பலர் விதவைகளாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் உள்ளனர். நாங்கள் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனவே மற்ற மாவட்டங்களில் வழங்குவது பேன்று எங்களுக்கும் தினக்கூலியை உயர்த்தி நிர்ணயம் செய்து வழங்க கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் அறக்கட்டளை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தங்கள் கோவிலுக்கு மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்துள்ளோம். அதற்காக வைப்புத்தொகையும் செலுத்தி இருக்கிறோம். ஆனால் மின் இணைப்பு கொடுக்காமல் ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தைக்கூறி மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். எனவே கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story