கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 3 Jun 2019 11:00 PM GMT (Updated: 3 Jun 2019 7:05 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்,

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

புதிய வகுப்பில் சேரப்போவதால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்குசென்றனர். புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை பெற்றோர்களே பள்ளிக்கு கொண்டு வந்து விட்டு சென்றனர். நேற்று முதல்நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் மதியம் வரை செயல்பட்டன.

பள்ளி தொடங்கிய முதல்நாளான நேற்று மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் வழங்கினார்.

கோடை காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த மாதம் 4-ந்தேதி முதல் நிறைவடைந்த 29-ந்தேதி வரை 100 டிகிரிக்கும் குறையாமல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. காற்று வீசினாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகிறார்கள். அப்படியே வந்தாலும் குடைபிடித்துக்கொண்டும், தலையில் துணியை போட்டு மூடிக்கொண்டும் செல்கிறார்கள். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்படவில்லை. அந்த பள்ளிகள் வருகிற 10-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Next Story