தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:30 AM IST (Updated: 4 Jun 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்து வருகின்றனர்.

இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதன் தகவல் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றதால் கடந்த 2 மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்கள் மனுக்கள் கொண்டு வந்தால் அவற்றை போடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு இடத்தின் அருகே பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் பொதுமக்கள் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து கடந்த மாதம் 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விலக்கப்பட்டன. இதையடுத்து கடந்த வாரம் திங்கட்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடந்தாலும் பொதுமக்கள் குறைந்த அளவே வந்திருந்தனர்.

ஆனால் நேற்று பொதுமக்கள் மனுக்களை அளிப்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 9 தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.

ஆனால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனு அளித்தனர். மனுக்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் ஆகியோர் பெற்றுக்கொண்டு, அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் கொடுத்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

Next Story