முதல்-மந்திரி குமாரசாமியுடன் எச்.விஸ்வநாத் திடீர் சந்திப்பு ஜனதாதளம்(எஸ்) தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்?
கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியை எச்.விஸ்வநாத் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில ஜனதாதளம் (எஸ்) தலைவராக இருந்து வருபவர் எச்.விஸ்வநாத். இவர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சித்தராமையாவுக்கு எதிராக கடும் விமர்சனம் செய்தார். முதல்-மந்திரியாக இருந்தபோது அவர் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியானது. கே.ஆர்.நகரில் ஜனதா தளம் (எஸ்) தோல்வி அடைந்தது. இதுகுறித்து எச்.விஸ்வநாத், ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பண பலத்திற்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது என்று கூறி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
டிக்கெட் கிடைக்கவில்லை
கட்சியின் மாநில தலைவராக இருந்தபோதும், தான் பரிந்துரை செய்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினார். இது ஜனதா தளம் (எஸ்) கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியை எச்.விஸ்வநாத் பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினார். அவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினர். அப்போது, கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும், எந்த முடிவுக்கும் தனது கருத்தை கேட்பது இல்லை என்றும், அதனால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜினாமா கடிதம்
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எச்.விஸ்வநாத் ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story