உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டது: ஈரோடு மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் எவை? அரசியல் கட்சியினர் ஆர்வம்


உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டது: ஈரோடு மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் எவை? அரசியல் கட்சியினர் ஆர்வம்
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 9:33 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ள நிலையில் ஈரோடு மாநகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் எவை என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஈரோடு,

தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பின்னர் 2016-ம் ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கையை எடுத்தது. ஆனால், ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்த தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை மீண்டும் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதன் ஒரு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்ற நிலை பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போதே இந்த நிலை நீடித்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

50 சதவீதம் பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் வார்டுகளில் ஆண்கள் போட்டியிட முடியாது. ஆனால், பொது வேட்பாளர்களுக்கான வார்டுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டியிட முடியும். இதனால் வழங்கப்பட்டு உள்ள 50 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்று பணி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த ஆயத்த பணிகள் நடந்தபோது ஈரோடு மாநகராட்சியில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதன்படி பெண்கள் பொது வார்டுகளாக 6, 7, 9, 11, 22, 23, 24, 29, 31, 33, 34, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 47, 49, 51, 52, 53, 54, 58 ஆகிய 26 வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் போட்டியிட 2, 4, 30, 48 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆக 30 தொகுதிகள் பெண்கள் மட்டுமே போட்டியிட வகை செய்யப்பட்டு இருந்தது.

இதுபோல் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் 30 வார்டுகளில் பெண்கள் மட்டுமே போட்டியிட உள்ளனர். அவர்கள் போட்டியிடும் வார்டுகள் எவை? எவை? என்ற பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ‘ஈரோடு மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. பெண்கள் போட்டியிடும் வார்டுகள் குறித்த பட்டியல் மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வெளியிடும். வார்டு வாரியாக பெண்கள் அதிகம் வாக்காளர்களாக இருக்கும் வார்டுகளில் முதல் 30 இடத்துக்குள் வரும் வார்டுகள் மகளிர் வார்டுகளாக இருக்கும். இதுபோல் மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு பெண்கள் போட்டியிடுவார்களா? பொது வேட்பாளர்கள் போட்டிடுவார்களா? என்பதையும் மாநில தேர்தல் ஆணையம் உரிய விகிதாசாரப்படி அறிவிக்கும். இதுபற்றிய முறையான அறிவிப்பு வந்ததும் அறிவிக்கப்படும்’ என்றார்.

உள்ளாட்சி அமைப்பிள் இடஒதுக்கீடு குறித்த தகவல் வெளியானது, அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு படை எடுத்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும், எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. தனி வார்டுகள் எது என்று அதிகாரிகளிடம் தகவல் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

உள்ளாட்சி அமைப்புகள் தற்போது பிரதிநிதிகள் இல்லாததால் முறையாக செயல்படவில்லை. சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் கூட பல்வேறு இடங்களில் சரியாக நடைபெறவில்லை. வார்டு கவுன்சிலர்கள் இருந்தால் அவர்களிடம் குறைகளை சுட்டிக்காட்ட முடியும். எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று பொதுமக்களும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Next Story