முகநூலில் புகைப்படத்தை காதலன் பதிவிட்டதால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


முகநூலில் புகைப்படத்தை காதலன் பதிவிட்டதால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2019 5:00 AM IST (Updated: 4 Jun 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

முகநூலில் புகைப்படத்தை காதலன் வெளியிட்டதால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இவர்களுடைய 2–வது மகள் நர்மதா (வயது 19). தவமணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து தமிழ்செல்வி துணி தேய்க்கும் தொழில் செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார். இதில், நர்மதா ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2–வது ஆண்டு படித்து முடித்து இருந்தார். அடுத்து 3–வது ஆண்டு படிக்க இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் அவர் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதைப் பார்த்த அவருடைய தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மகளை கீழே இறக்கி வைத்து விட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் வந்தவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது நர்மதா இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், நர்மதா தற்கொலை செய்த அறையில் இருந்து அவர் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய தாயார் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘நர்மதாவும், அவருடைய மாமா மகன் ஒருவரும் ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். நர்மதாவின் புகைப்படத்தை அந்த வாலிபர் தன்னுடைய பெயருடன் சேர்த்து முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. தனது தற்கொலைக்கு காரணம் மாமா மகன் மற்றும் மாமா வீட்டில் சிலரின் பெயரை நர்மதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக்கு இதுமட்டும் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.


Next Story