ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடிய 2 வெளிநாட்டுக்காரர்கள் கைது


ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடிய 2 வெளிநாட்டுக்காரர்கள் கைது
x
தினத்தந்தி 3 Jun 2019 10:47 PM GMT (Updated: 3 Jun 2019 10:47 PM GMT)

ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடிய வெளிநாட்டுக் காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை பாந்திரா மேற்கு, வாட்டர் பீல்டு ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த 29-ந்தேதி 2 மர்மநபர்கள் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமராவை பொருத்தி சென்றதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியவர்களை பிடிக்க போலீஸ் கூடுதல் கமிஷனர் மனோஜ் சர்மா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்ட ஏ.டி.எம். மையம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

2 ருமேனியர்கள் கைது

இந்தநிலையில் சுமார் 36 மணி நேரம் கழித்து ஸ்கிம்மர் கருவியை எடுக்க அந்த ஏ.டி.எம்.க்கு வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ருமேனியா நாட்டை சேர்ந்த பெத்யு ஜார்ஜ் ஜிஜி(வயது51), நெட்சகோ யான் யானூன்(36) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து கேமரா மற்றும் ஸ்கிம்மர் கருவி ஒன்றை பறிமுதல் செய்தனர். அதில் சுமார் 50 வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் இருந்தன.

இதேபோல 2 பேரும் தனியார் வங்கி ஏ.டி.எம்.யில் பொருத்தி இருந்த ஸ்கிம்மர் கருவி, கேமராவையும் போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும், வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடியதாக கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பிடிப்பட்டு வரும் ருமேனிய நாட்டு கும்பலை சேர்ந்தவர்கள் என கூடுதல் கமிஷனர் மனோஜ் சர்மா கூறினார்.

Next Story