அலங்காநல்லூர் விவசாயி படுகொலையில் பரபரப்பு திருப்பம்: 2-வது மனைவி - மகள் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்


அலங்காநல்லூர் விவசாயி படுகொலையில் பரபரப்பு திருப்பம்: 2-வது மனைவி - மகள் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 4 Jun 2019 5:15 AM IST (Updated: 4 Jun 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூரில் விவசாயி கொலையில் திடீர் திருப்பமாக அவரது 2-வது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). விவசாயியான இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 31-ந்தேதி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல், திடீரென அவரை சுற்றி வளைத்து அரிவாள், கத்தியால் வெட்டினர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் 3 பிரிவுகளாக பிரிந்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தற்போது பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையான இளங்கோவனின் 2-வது மனைவி அபிராமி (40) தனது மகள் அனுசுயாவுடன் (21) சேர்ந்து கூலிப்படையை ஏவி, இளங்கோவனை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. இதனை அபிராமி ஊர்சேரி கிராம நிர்வாக அலுவலர் காளிராஜிடம் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் தாய், மகள் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இளங்கோவன், சொத்துகள் வாங்கியதில் அபிராமிக்கு எதுவும் கொடுக்க வில்லையாம். குடும்ப செலவுக்கும் பணம் எதுவும் கொடுக்கவில்லையாம். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்து கூலிப்படையை ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக அபிராமி திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தாயும், மகளும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இளங்கோவனை கொலை செய்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், 2 மோட்டார் சைக்கிள்களில் வரும் முகமூடி அணிந்த 6 மர்ம நபர்கள் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த இளங்கோவனை சரமாரியாக வெட்டுகின்றனர். இதில் நிலைகுலைந்த அவர் வீட்டின் வாசலிலேயே விழுந்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்கிறது.

இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story