எம்.எல்.ஏ. பதவி; வைத்திலிங்கம் ராஜினாமா


எம்.எல்.ஏ. பதவி; வைத்திலிங்கம் ராஜினாமா
x
தினத்தந்தி 4 Jun 2019 5:32 AM IST (Updated: 4 Jun 2019 5:32 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதையொட்டி தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி,

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைத்திலிங்கம். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக வைத்திலிங்கம் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிட்டார். இதற்கு வசதியாக தனது சபாநாயகர் பதவியை அப்போது ராஜினாமா செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் 1 லட்சத்து 97 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கம் அமோக வெற்றிபெற்றார். அதன்பிறகும் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார்.

தனது ராஜினாமாவால் காலியான சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளால் போட்டி ஏற்பட்டால் வாக்களிப்பதற்கு வசதியாக தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் புதிய சபாநாயகராக ஆளுங்கட்சி சார்பில் சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அவர் நேற்று சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை முதல் அமைச்சர் நாராயணசாமியும் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியை என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபா நாயகர் சிவக்கொழுந்துவிடம் அவர் கொடுத்தார். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி உடனிருந்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறும்போது, ‘புதுச்சேரி எம்.பி., காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. என 2 பதவிகளை வகித்து வந்ததால் சட்டப்படி ஒரு பதவியில் இருந்து விலக வேண்டும். எனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினேன். வருகிற 17-ந்தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்குகிறது. அப்போது எம்.பி.யாக பதவியேற்க உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Next Story