காரிமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஜவுளி வியாபாரி வீடு சேதம் மகனை பிடித்து போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஜவுளி வியாபாரி வீடு சேதம் மகனை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 7:11 PM GMT)

காரிமங்கலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஜவுளி வியாபாரி வீடு சேதம் அடைந்தது. இதுதொடர்பாக மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 58). ஜவுளி வியாபாரி. இவருக்கு செந்தில், விமல், வினோத் ஆகிய 3 மகன்களும், பூந்தளிர் என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் சொக்கலிங்கத்துக்கு சொந்தமான பழைய ஓட்டு வீடு இருந்தது. அதை மகன்கள் 3 பேருக்கும் பிரித்து கொடுத்துள்ளார். மேலும் விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வது சம்பந்தமாக இரண்டாவது மகனான விமல் அடிக்கடி தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது சம்பந்தமாக மாட்லாம்பட்டியை சேர்ந்த உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அதில் உடன்பாடில்லாத விமல், தந்தை மற்றும் அண்ணன், தம்பியின் மீது கோபம் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் சொக்கலிங்கத்தின் கடைசி மகனான வினோத் ஜவுளி வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை தந்தை சொக்கலிங்கத்திடம் கொடுத்து தனக்காக வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த விமல் தனக்கு தனது தந்தை சொக்கலிங்கம் துரோகம் செய்வதாக நினைத்து அதற்கு பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு விமல் தான் வாங்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்து தந்தை புதிதாக கட்டி கிரகப்பிரவேசத்திற்காக காத்திருந்த வீட்டு ஜன்னலில் கட்டி அதை வெடிக்க செய்திருக்கிறார். நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட அந்த பயங்கர சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது சொக்கலிங்கம் கட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறிக்கிடந்தன. ஜன்னல் அருகே வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை உறவினர்கள் பார்த்து அதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டை பார்வையிட்டனர். பின்னர் சொக்கலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சொத்து தகராறில் சொக்கலிங்கத்தின் இரண்டாவது மகன் விமல் நாட்டுவெடி வைத்து வீட்டை தகர்க்க முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

பின்னர் விமலை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் சொத்து தகராறில் மகனே வீட்டை வெடிவைத்து தகர்க்க முயற்சி மேற்கொண்ட சம்பவம் மாட்லாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story