தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் வந்த 681 பேரிடம் உறுதிமொழி கடிதம் போலீசார் எழுதி வாங்கினர்


தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் வந்த 681 பேரிடம் உறுதிமொழி கடிதம் போலீசார் எழுதி வாங்கினர்
x
தினத்தந்தி 5 Jun 2019 3:15 AM IST (Updated: 5 Jun 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த 681 பேரிடம் உறுதிமொழி கடிதத்தை போலீசார் எழுதி வாங்கினர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது அவ்வப்போது நடத்தப்படும் வாகன சோதனையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் மேற்பார்வையில் தர்மபுரி-சேலம் சாலையில் உள்ள வள்ளலார் திடல் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களிடம் போலீசார் வெள்ளை தாள்களை வழங்கினார்கள். அதில் வாகனத்தை ஓட்டி வந்தவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை எழுத அறிவுறுத்தினர். பின்னர் இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் போது உயிர் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று ஒவ்வொரு வாகன ஓட்டியிடமும் எழுத்துபூர்வமாக உறுதிமொழி கடிதத்தை எழுதி வாங்கினார்கள். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக வாகனசோதனை நடத்திய போலீசார் கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஏற்படும் ஆபத்துகள், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அந்த பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் எனஅனைத்து தரப்பை சேர்ந்த 681 பேரிடம் இனிமேல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை இயக்குவோம் என்ற உறுதிமொழி கடிதத்தை எழுதி வாங்கி உள்ளோம். இந்த சோதனை தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story