ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் தஞ்சையில், போலீஸ் தடையை மீறி நடந்தது


ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் தஞ்சையில், போலீஸ் தடையை மீறி நடந்தது
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 7:30 PM GMT)

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தஞ்சையில், போலீஸ் தடையை மீறி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் 18 கேள்விகள் அடங்கிய கடிதத்தை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டவர்களுக்கு போலீசார் அனுப்பி இருந்தனர். போலீசார் அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இரும்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டன. தலைமை தபால் நிலைய நுழைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இருந்தாலும் போலீசாரின் தடையை மீறி தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சியினர், தி.க., மற்றும் விவசாயிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்று கூடி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பழனிமாணிக்கம் எம்.பி.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் து.செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், மக்கள் அதிகாரம் அமைப்பு பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கைவிட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்குரிய காவிரி நீரை பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் சாமி.நடராஜன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி மற்றும் விவசாயிகள், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை-புதுக்கோட்டைக்கு 2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக கொண்டு வரப்பட்டது. அந்த சாலையை தூத்துக்குடியில் இருந்து 6 வழிச்சாலையாக சென்னை சாலையுடன் இணைக்கிறோம் என்று ஒரு திட்டத்தை கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் அகர்வாலுக்கும், தஞ்சையில் இப்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

கர்நாடகத்தை சேர்ந்த அமைச்சர், நாங்கள் தண்ணீர் தர மாட்டோம் என்று கூறுகிறார். அந்த அரசாங்கம் அவர் மீது வழக்கு போட மறுக்கிறது. ஆனால் தமிழகத்தின் உரிமைகளை கேட்கும் எங்கள் மீது வழக்கு போட தமிழக அரசு துடிக்கிறது. இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம். ஆகவே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

தமிழக மக்களை அலட்சியப்படுத்துவதை பிரதமர் மோடி, தேர்தல் முடிவுக்கு பிறகாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் பாடுபடுவோம். மக்கள் கருத்துக்களை கேட்காமலேயே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து இருப்பது தமிழக மக்களுக்கு செய்திருக்கக்கூடிய மிகப்பெரிய துரோகம்.

இந்த துரோகத்திற்கு அவர்கள் பரிகாரம் தேட வேண்டும் என்றால் உடனடியாக சட்டசபையை கூட்டி, காவிரி பாசன பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். மும்மொழி கொள்கை என இந்தியை திணிக்க முயற்சித்தபோது உடனடியாக அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அண்ணாவின் இருமொழி கொள்கை தான் நீடிக்கும் என சொன்னதற்காக பாராட்டுகிறேன். அதே முடிவை இதிலும் எடுத்து தமிழகத்தின் உரிமையை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.

தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வார்கள். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை குறி வைத்தது போல், இந்த திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களையும் குறி வைப்பார்கள். அதை பற்றி கவலைப்படாமல் போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story