தூய்மையான சென்னையை உருவாக்க மாணவிகள் உறுதிமொழி
தூய்மையான சென்னையை உருவாக்குவதற்கான, ‘தூய்மை இந்தியா உறுதிமொழி’யை மாணவிகள் எடுத்தனர்.
சென்னை,
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியது.
அதன்படி சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் 1500 மாணவிகள் மற்றும் 60 ஆசிரியர்கள் தூய்மையான சென்னையை உருவாக்குவதற்கான, ‘தூய்மை இந்தியா உறுதிமொழி’யை எடுத்தனர். இந்த விழிப்புணர்வு முகாமில் மக்கும் மற்றும் மக்காத குப்பை என வகைப்படுத்தி மாநகராட்சி வாகனத்தில் வழங்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
இதேபோல் சென்னை முழுவதும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் போன்ற அனைத்து பள்ளிகளிலும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த முகாமில் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) குமாரவேல் பாண்டியன், கல்வி அலுவலர் பாரதிதாசன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story