போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக சென்னையில் 37,338 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
சென்னையில் 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி உயிரை விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட கடற்கரை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.
இந்த மோசமான கலாசாரத்தை ஒடுக்குவதற்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
80 வழக்குகள்
இதன் ஒரு பகுதியாக கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் 130 பேர் இணைந்து 29 இடங்களில் தடுப்பு அமைத்து வாகன சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிவந்த 80 பேர் மீது வழக்கு போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போதையில் வாகனம் ஓட்டிய 22 பேர் உள்பட போக்கு வரத்து விதிகளை மீறிய 242 பேர் இந்த சோதனையின்போது வழக்கில் சிக்கி உள்ளனர்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் மீது 18 ஆயிரத்து 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை கடுமையாக மீறி வாகனங்கள் ஓட்டிச் சென்றதாக சென்னையில் 57 ஆயிரத்து 636 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இதில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய அனுப்பப்பட்ட பரிந்துரை, போக்குவரத்துத் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கடுமையாக மீறுவோர் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போக்குவரத்து போலீசார் கூறினார்கள்.
Related Tags :
Next Story