சிட்லபாக்கம், அனகாபுத்தூர் பகுதியில் ரூ.9¼ கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்


சிட்லபாக்கம், அனகாபுத்தூர் பகுதியில் ரூ.9¼ கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:45 PM GMT (Updated: 4 Jun 2019 8:56 PM GMT)

சிட்லபாக்கம், மாடம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் ரூ.9¼ கோடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீருடன் கூடுதலாக குடிநீர் வாங்கும் வகையில் செங்கழுநீர் மலை கல்குவாரி பள்ளங்களில் இருந்து நீரை சுத்திகரித்து வழங்க சுத்திகரிப்பு நிலையம் ரூ.6 கோடியே 40 லட்சம் செலவில் அனகாபுத்தூரில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் ரூ.3 கோடி மூலதன மானிய நிதியில் குடிநீர் திட்ட பணிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு

தமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தடுப்பதற்கு முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இத்திட்டம் தொடங்கி உள்ளோம். கடுமையான வறட்சி மற்றும் மழை குறைவின் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டத்தை பொறுத்தவரையில் சிட்லபாக்கம் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாடம்பாக்கம் ஏரியில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று 2 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்திட்டம் கொண்டு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

5,700 குடும்பங்களை உள்ளடக்கிய இப்பகுதியில் 23 ஆயிரம் மக்கள் இத்திட்டத்தால் பயன் அடைவார்கள். பல்லாவரம், பம்மல் பகுதியில் இதே போன்றதொரு திட்டம் செயல்படுத்த இருக்கிறோம். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த வறட்சியை விட தற்போது குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் முழுவதுமாக தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

விழாவில் நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபுர்ரகுமான், மண்டல பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story