தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்


தக்கலை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக மதுபிரியர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே கூட்டமாவு ஆள்காட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதை அறிந்த சடயங்கால், நிரம்பி, புலிக்கோடு, முண்டன்விளை, கூட்டமாவு, கல்லுவிளை ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைதொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் கூட்டமாவு சகாய அன்னை ஆகியோரும் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையே போராட்டம் நடைபெறும் பகுதியில் மது குடிப்பதற்கு ஆதரவாக மதுபிரியர்கள் சிலரும் திரண்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

அதைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அப்பகுதியில் தபால் நிலையம், கிராம அலுவலகம், ரேஷன்கடை போன்றவை உள்ளதால், மதுக்கடையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே, நிரந்தரமாக கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். அதற்கு துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், டாஸ்மாக் கடை தற்போது திறக்கப்படாது என்று கூறினார். அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். காலை 11.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை போராட்டம் நடைபெற்றது.

Next Story