பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சேர வசதியாக புதுவை அரசு கல்லூரிகளில் 1,276 இடங்கள் அதிகரிப்பு - அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு


பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சேர வசதியாக புதுவை அரசு கல்லூரிகளில் 1,276 இடங்கள் அதிகரிப்பு - அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2019 4:45 AM IST (Updated: 5 Jun 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் புதுவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வசதியாக இந்த ஆண்டு 1,276 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாக தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். குறிப்பாக 10-ம் வகுப்பில் 7 சதவீதமும், 12-ம் வகுப்பில் 12 சதவீதமும் கடந்தாண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளை கடந்து கல்வித்துறை செயலாளர், இயக்குனர், அதிகாரிகள், ஆசிரியர்களின் முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்த கல்வியாண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் மாணவர்களுக்கான இடங் களை அதிகப்படுத்தி உள்ளோம். தற்போது 1,276 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-16ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது கல்லூரிகளில் 3,564 இடங்கள் மட்டுமே இருந்தன. இதனை 2016-17-ம் ஆண்டில் 3,858 ஆகவும், 2017-18ல் 5,068 இடங்களாகவும், 2018-19ல் 5,199 ஆகவும் உயர்த்தினோம். தற்போது இந்த ஆண்டு (2019-20) 6,475 இடங்களாக உயர்த்தியுள்ளோம். அதாவது இந்த ஆண்டு 1,276 இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு ஒரே ஒரு விண்ணப்பத்தின் மூலம் ஆன்-லைன் மூலமாக அனைத்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தோம். அப்போது சில குறைபாடுகள் எங்களுடைய கவனத்திற்கு வந்தது. அதனை சரி செய்து இந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி மையங்கள் ஏற்படுத்தி, இந்த ஆண்டு ஆன்-லைன் மூலம் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை பணிகள் சரியான முறையில் நடைபெற்று வருகிறது. கடைசி கலந்தாய்வின் போது இடம் கிடைக்காத மாணவர்களை சேர்த்து கொள்ள அந்த பள்ளி முதல்வர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளோம். அதுபோல் புதுச்சேரி மாணவர்கள் சேர்ந்தது போக மீதியுள்ள இடங்களில் தமிழக மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் அனுமதி கொடுத்துள்ளோம். நாட்டில் எந்த மாணவரும் கல்வி கற்க முடியவில்லை என்று கூறாமல் இருப்பதற்காக இதை செய்துள்ளோம்.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் உயர்ந்ததால் கல்லூரிகளில் தற்போதுள்ள அடிப்படை வசதிகளை கொண்டே இடங்களை உயர்த்தியுள்ளோம். அதாவது கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க 8,896 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு 11,828 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிகளில் உள்ள வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் தகுதியான பேராசிரியர்கள் 150 பேரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.எஸ்.சி. உளவியல், பி.ஏ. பொது நிர்வாகம் ஆகிய 2 புதிய படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும். வரும் காலங்களில் தேவைக்கு ஏற்ப புதிய படிப்புகள் கொண்டு வரப்படும். அனைத்து கல்லூரிகளுக்கும் 3 மாதங்களுக்குள் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவர்.

பள்ளிகள் தொடங்கி ஒருவார காலத்திற்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் பெரும் முயற்சி எடுத்து கடந்த 3 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் 405 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தோம். அதற்கு அனுமதி அளித்த நிர்வாகியே மறு ஆய்வு செய்யக்கோரி நிறுத்தினார். தற்போது விதியில் சிறு திருத்தம் செய்து மீண்டும் குறுகிய காலத்தில் விண்ணப்பங்களை பெறவுள்ளோம்.

தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு அரசு ரூ.1லட்சத்து 5 ஆயிரம் ஆண்டிற்கு செலவு செய்யப்படுகிறது. ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் படிக்கும்போது இந்த நிலை. இதுவே மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால் செலவுத்தொகை அதிகரிக்கும். எனவே அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையாமல் இருக்க பெற்றோர்களும், மாணவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று(நேற்று) மாலை 5 மணி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கல்வித்துறை செயலாளர் அன்பரசு, உயர் கல்வித்துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு மற்றும் பலர் உடனிருந்தனர்.

பேட்டியின் முடிவில் அமைச்சர் கமலக்கண்ணன் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கையேட்டினை வெளியிட்டார். அதனை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

Next Story