மீனவர் நலன் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்; பிரதமருக்கு, முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம்


மீனவர் நலன் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்; பிரதமருக்கு, முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

மீனவர் நலன் அமைச்சகத்தை உருவாக்க வேண்டுமென பிரதமருக்கு முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராமதாஸ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் 9 கடல் சார் மாநிலங்களிலும், 4 யூனியன் பிரதேசங்களிலும் மற்றும் ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீர்நிலைகள் உள்ள இடங்களில் வசிக்கும் 15 மில்லியன் மீனவர்கள் இந்திய சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றுகின்றனர்.

அவர்களது கடும் உழைப்பால் மீன் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா 2-ம் இடத்தை பெற்றிருக்கிறது. இதன் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேலும் மக்களுக்கு தேவையான உணவையும் அளிக்கிறது.

இந்திய பொருளாதாரத்திற்கு மீனவர்கள் பெருமை சேர்த்தபோதிலும் 69 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள். ஆண்டுதோறும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றத்திற்கு ஆட்படுகிறார்கள். இவர்களின் கல்வி அறிவும் குறைவாக உள்ளது.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மீனவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. இவர்களது சமூக, பொருளாதார அரசியல் பின்தங்கிய நிலையை கருதிதான் மண்டல் கமிஷன் இந்தியாவின் மீனவர்களுக்கு தனித்தொகுதிகள் வழங்கவேண்டும் என்றும், அவர்களை பழங்குடியினர் இனத்தில் சேர்க்க வேண்டுமென பரிந்துரைத்தது.

நீண்ட காலமாக வஞ்சிக்கப்பட்டு வரும் மீனவர் சமுதாயம், அதன் தொழில் மற்றும் அட்டவணை இன, பழங்குடி இன மக்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவனத்தை பெற வேண்டும். இதை ஒரு சாதாரண அரசு துறை செய்ய முடியாது. ஒரு தனி அமைச்சகமாக இருந்தால் தான் தனி நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

எனவே மீனவர்களை காக்க மீனவர் நலன் அமைச்சகத்தை உருவாக்கி, தனி பொறுப்புள்ள மந்திரியை நியமிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story