ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்


ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:45 PM GMT (Updated: 4 Jun 2019 9:37 PM GMT)

ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய மக்களின் சுகாதார நலனை கருதி ரூ.5 லட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தினார். புதுவையிலும் இந்த திட்டத்தினை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.

ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தாமல் தொடக்க விழாவோடு மூடுவிழா நடத்திவிட்டது. இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல் விட்டதால் புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 1.03 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

புதுச்சேரி மெடிக்கல் ரிலீவ் சொசைட்டி மூலம் மருத்துவ உதவித்தொகையாக அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. நிதிச் சுமையால் தற்போது அந்த உதவித்தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுவை அரசின் மருத்துவ உதவித்தொகையை பெறவேண்டுமானால் அரசு பொதுமருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டி உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.425 செலுத்தினால் ரூ.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை ஏழை, எளிய மக்கள் பெற இயலும். எனவே மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி மக்களுக்கு செயல்படுத்தாமல் ஆளும் காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது.

இந்த திட்டத்தை விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தாவிட்டால் மாநில தலைமையின் அனுமதியை பெற்று பா.ஜ.க. சார்பில் சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story