ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள் 2 பேர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள் 2 பேர் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 5 Jun 2019 3:45 AM IST (Updated: 5 Jun 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கொலை குற்றவாளிகள் 2 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். தலைமறைவாக உள்ள வாலிபருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயநகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர். இவரை கடந்த 17-10-2009 அன்று ஒரு கும்பல் படுகொலை செய்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரைட் (வயது 32), பிரின்ஸ் (29), பாஸ்கர் (28) மற்றும் சுபின் ஆகிய 4 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 10-4-2017 அன்று பிரைட், பிரின்ஸ் மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சுபின் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பிரைட் உள்ளிட்ட 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நாகர்கோவில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே மேல் முறையீடு காரணமாக 3 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர்கள் வெளியே வந்தனர். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரைட், பிரின்ஸ் மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேருக்கும் நாகர்கோவில் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி தலைமையிலான அமர்வு கடந்த 1-4-2019 அன்று உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து 3 பேரையும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜராகும்படி கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் பிரைட் மற்றும் பிரின்ஸ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு கோர்ட்டுக்கு வந்து நீதிபதி கருப்பையா முன் ஆஜராகினர். பின்னர் 2 பேரையும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்க நீதிபதி கருப்பையா உத்தரவிட்டார். அதன்பேரில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 2 பேரையும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

ஆனால் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் பாஸ்கர் இன்னும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருக்கிறது.

Next Story