பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள்; தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி


பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள்; தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி
x
தினத்தந்தி 5 Jun 2019 4:15 AM IST (Updated: 5 Jun 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் காட்டுயானைகள் புகுந்ததால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலைத்தோட்டம் ரேஞ்ச் எண்.1 பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தினமும் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் தோட்ட தொழிலாளர்களையும் துரத்தி வருவதுடன், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டுயானைகள் குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இதனைகண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கினர். இதையடுத்து அங்கிருந்து யானை கூட்டம் நேற்று அதிகாலை பந்தலூரில் இருந்து சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள எலியாஸ் கடைப்பகுதியில் சாலையை வழிமறித்து நின்றன. இதனால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன், வனக்காப்பாளர் லூயீஸ் மற்றும் வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டுயானைகள் அங்கிருந்து செல்லாமல், சாலையோரத்தில் உள்ள முட்புதர்களுக்குள் முகாமிட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாகனங்களை அச்சத்துடன் இயக்கினர். யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாததால் தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கும் பீதியில் உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுயானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அகழியை தூர்வாரி, அகழி இல்லாத இடத்தில் விரைவில் அகழி அமைக்க வேண்டும் என்று கூறினர்.

Next Story