கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் முத்தரசன் பேட்டி
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என கடலூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கடலூர்,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட குழு சார்பில் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தும் இடம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் தலைமை தாங்கினார். வட்டசெயலாளர் தமிழ்மணி, துணை செயலாளர் சுந்தர்ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர்கள் குளோப், காசிலிங்கம், பொருளாளர் செல்வராஜ், வட்ட செயலாளர்கள் குப்புசாமி, பூபாலன், மதியழகன், கலியமூர்த்தி, முருகவேல், முத்துக்குமரன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினர். அதன்படி கட்சி கொடிகளுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தும் இடத்தில் திரண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசி ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டனர். அப்போது சில நிபந்தனைகளுடன் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விழுப்புரம், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 274 கிணறுகள் தோண்டப்படுகிறது. இதில் பெரும்பான்மை கிணறுகள் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு சில கிணறுகள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் அனுமதி கொடுத்துள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நடமாட்டம் இல்லாத பாலைவனம் போன்ற பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால் விவசாய நிலங்களிலும், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் முற்றிலும் சீரழிந்துவிடும். குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது. மக்கள் சொந்த இடத்தை விட்டு அகதிகளை போல வெளியேற வேண்டிய நிலை வரும். எனவே தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
மத்திய அரசை பொறுத்தவரை மக்களை விட கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசாகத்தான் உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை எங்கும் அனுமதி அளிப்பதில்லை. தடையை மீறித்தான் போராட்டம் நடக்கிறது. இங்கேயும் போராட்டம் நடத்துவதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. வேதாந்தா நிறுவனத்துக்காக சர்வாதிகார போக்கை மத்திய அரசு கையாளுகிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது.
கடந்த 2015–ம் ஆண்டு அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்றார். ஆனால் இங்கே எடப்பாடி தயக்கம் காட்டுகிறார். இவர் தயக்கம் காட்டினாலும் சரி, மோடி பிடிவாதம் காட்டினாலும் சரி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை ரத்து செய்யும் வரை ஜனநாயக ரீதியில் எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.