நம்பியூர் அருகே பரபரப்பு; கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


நம்பியூர் அருகே பரபரப்பு; கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2019 4:35 AM IST (Updated: 5 Jun 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் அரசன்கொட்டைப்புதூர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு ெதரிவித்தனர். ஆனால் தொடர்ந்து கோழிப்பண்ணை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்றுக்காலை 7 மணி அளவில் அப்பகுதி பொதுமக்கள் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு வரும் இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கோழிப்பண்ணை அருகே மதியம் 12 மணி அளவில் சமையல் செய்து சாப்பிட்டனர்.

மாலை 3 மணி அளவில் நம்பியூர் தாசில்தார் உமா மகேஸ்வரன் மற்றும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், அரசன்கொட்டைப்புதூரில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு கோழிப்பண்ணை அமைக்கப்பட்டால், எங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டால் விவசாய நிலமும் பாதிப்படையும். எனவே எங்கள் பகுதியில் கோழிப்பண்ணை அமைக்கக்கூடாது என்றனர்.

அதற்கு தாசில்தார் உமா மகேஸ்வரன், அரசன்கொட்டைப்புதூரில் கோழிப்பண்ணை அமைக்க தடை விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் போராட்டத்ைத கைவிட்டு மாலை 5 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சமையல் செய்து சாப்பிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story