மாவட்டத்தில் வறட்சி எதிரொலி: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.13 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் பேட்டி


மாவட்டத்தில் வறட்சி எதிரொலி: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.13 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 5 Jun 2019 4:51 AM IST (Updated: 5 Jun 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சி எதிரொலியாக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.13 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் குடிநீர் வினியோகம் தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 329 ஊராட்சிகள், 2,306 குக்கிராமங்கள் உள்ளன. அனைத்து மக்களுக்கும் குடிநீர் வினியோகிக்க நாளொன்றுக்கு சராசரியாக 79.78 மில்லியன் லிட்டர் அளவில் குடிநீர் தேவைப்படுகிறது. அதன்படி தற்போதைய நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழும், ஊரக குடிநீர் திட்டத்தின் கீழும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களின் தேவைக்கேற்ப உறைகிணறு, ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கோடைகால தேவையை கருத்தில் கொண்டு ரூ.12.9 கோடி மதிப்பில் 372 குடிநீர் திட்டப்பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 2,306 குக்கிராமங்களில் 1,040 கிராமங்களுக்கு தினந்தோறும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறையும், 701 கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒருமுறையும் என்ற அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 262 குக்கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது. ஆனால் மக்கள் உள்ளூர் குடிநீர் திட்ட நீரை தவிர்த்து காவிரி நீர் தான் வேண்டும் என்று கேட்கின்றனர். அந்த பகுதி மக்களுக்காகவே புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் முறைகேடான இணைப்புகள், குழாய்களை சேதப்படுத்துதல் ஆகியவற்றை தடுத்திட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலைகளில் தற்போது வரை 305 சட்டவிரோத இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு முறைகேடான குடிநீர் இணைப்புகள் மூலம் பொதுமக்களின் குடிநீர் வினியோகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர காவிரி கூட்டுக்குடிநீர் வினியோக குழாய்களின் வால்வுகளில் ஏற்படும் நீர் கசிவுகளினால் குடிநீர் வீணாகாமல் அதனை அருகிலேயே சிறிய அளவில் சேமிப்பு தொட்டி ஏற்படுத்தி முறையாக குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவும், பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக 1800 425 7040 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அயினான், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story